Breaking News

‘முதலில் ஓடியது யார்?’ – முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார மோதல்!

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அனல் பறந்த வார்த்தைப் போர்!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வசம் உள்ள காவல்துறை மீதான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் காரசாரமாக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

‘இவருக்கு பதில் இவர்’ – உதயநிதி விமர்சனம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எந்தக் கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல், இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவதுபோல, ‘இவருக்கு பதில் இவர்’ என்ற பாணியில் பதில் சொல்கிறார்கள்” என விமர்சித்தார்.

‘ரோல் கேமரா... ஆக்சன்’ – முதல்வருக்கு உதயநிதி அறிவுரை!

மேலும், “முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் நேரமிருக்கிறது. அவர் நன்றாக முன்தயாரிப்பு செய்து வரட்டும். ‘ரோல் கேமரா... ஆக்சன்’ மோடில், சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதைகள் சொல்லாமல், மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கூறினார்.

‘நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது!’ – முதல்வர் விஜய்

இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் எழுந்த முதல்வர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை திங்கள்கிழமை கொடுக்கிறேன். நான் இங்கே இல்லையென்றாலும், உங்களின் கேள்விகள் எனக்கு வந்துவிடும்.

நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது” என்றார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் அவையை விட்டு வெளியேறினார்.

‘கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருக்கும் தெரியும்!’ – உதயநிதி பதிலடி

முதல்வர் விஜய் வெளியேறியதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருக்குமே தெரியும். இதைச் சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார்” எனக் கூறினார்.

இதனால் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் – உதயநிதி ஸ்டாலின் இடையேயான வார்த்தைப் போர் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments