“வாலாஜாபாத்தில் 15 நாட்களாகக் குடிநீர் தட்டுப்பாடு!” - 4-வது வால்வைச் சீரமைக்க ஆட்சியர் சினேகாவிடம் கவுன்சிலர் மனு!
காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 17, 2026
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி. தி. சினேகா, இ.ஆ.ப. அவர்களிடம் இக்கோரிக்கை மனு நேரில் வழங்கப்பட்டது..
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் பாதிப்பு:
வாலாஜாபாத் பேரூராட்சி 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய ஆறுமுகப்பேட்டை பகுதியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்திருக்கிறது. இதிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் 4 பிரதான வால்வுகளும் பழுதடைந்ததால், கடந்த 15 நாட்களாகப் பொதுமக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பேரூராட்சி அலட்சியம் & கவுன்சிலர் சொந்தச் செலவு நடவடிக்கை:
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கவுன்சிலர் லயன் வெங்கடேசன் தனது சொந்தச் செலவில் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்தார். மேலும், சொந்த நிதி மூலம் 3 வால்வுகளையும் சீரமைத்துள்ளார்.
4-வது வால்வு உதிரிபாகங்கள் தட்டுப்பாடு:
4-வது வால்வுக்கான உதிரிபாகங்கள் சந்தையில் கிடைக்காததால் அதனை இன்னும் சீரமைக்க முடியவில்லை. தற்போது 3 வால்வுகள் மூலம் 60% குடிநீர் தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்படுவதால் மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.
சிறிய பம்புகள் & கைபம்புகள் பழுது:
பேரூராட்சியில் உள்ள 35-க்கும் மேற்பட்ட சிறிய மின்விசை மோட்டார் குடிநீர்த் தொட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவையும், 100-க்கும் மேற்பட்ட இந்தியா மார்க் கைப்பம்புகளில் பாதிக்கும் மேற்பட்டவையும் பழுதடைந்து முடங்கிக் கிடக்கின்றன.
மாவட்ட நிர்வாகத்திற்கு வைக்கப்பட்ட கோரிக்கை:
ஆறுமுகப்பேட்டை பகுதியில் குளம், கிணறு உள்ளிட்ட மாற்று நீர் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் முழுமையாக இந்த நீர்த்தேக்கத் தொட்டியையே நம்பியுள்ளனர்.
எனவே, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த 4-வது வால்வு, சிறிய மின்விசை மோட்டார்கள் மற்றும் கைபம்புகளை உடனடியாகச் சீரமைத்து வாலாஜாபாத் பகுதி மக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments