“கோவில் திருவிழாவில் பயங்கரம்!” - கானா பாட்டு கேட்டதில் தகராறு: இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை!

காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 17, 2026
சம்பவத்தின் பின்னணி:
படுநெல்லி கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிச் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவிருந்தது. விழாவின் முதல் நாள் பொன்னியம்மனுக்குப் பொங்கல் வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, இரவு சுவாமி வீதியுலாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதீத போதையில் ஒலிபெருக்கியில் (Speaker) கானா பாட்டு கேட்டுப் பிரச்சனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிலர் தடுத்து நிறுத்தி, காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அந்தப் போதை கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
முன்பகை காரணமாகக் கொடூரக் கொலை:
பின்னர், அந்த போதை கும்பல் முன்பகை காரணத்தைக் மனதில் கொண்டு, அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் விக்கி (எ) நீலகண்டன் ஆகிய இருவரையும் குறிவைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகங்கள் சிதைக்கப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம் & பதற்றம்:
தகவலறிந்து வந்த பொன்னேரிக்கரை காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்ற முயன்றபோது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். திருவிழாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்காததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டி காவல்துறையினருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, உடல்களை மீட்டுச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
3 தனிப்படைகள் அமைப்பு & 200 போலீசார் குவிப்பு:
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், இ.கா.ப., தப்பியோடிய கொலையாளிகளை உடனடியாகப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் படுநெல்லி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் பொன்னேரிக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments