“போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு!” - காஞ்சிபுரத்தில் ஆட்சியர் சினேகா தலைமையில் பல்லாயிரம் மாணவர்கள் உறுதிமொழி!
காஞ்சிபுரம் | ஆகஸ்ட் 11, 2026
கீழ்கதிர்பூர் BAV பள்ளியில் பிரம்மாண்ட நிகழ்வு:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கீழ்கதிர்பூர் BAV பன்னாட்டுப் பள்ளியில் இன்று (11.08.2026) இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி.சினேகா, இ.ஆ.ப. முன்னிலையில் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் முதலமைச்சர் வாசித்த போதை ஒழிப்பு உறுதிமொழியை ஒரே குரலில் வாசித்து உறுதி ஏற்றுக்கொண்டனர்.
மாணவர்கள் எடுத்துக்கொண்ட போதை ஒழிப்பு உறுதிமொழி:
"போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை நல்வழிப்படுத்த மீட்டெடுத்து எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்."
நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்:
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். அரவிந்த், இ.கா.ப., காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி எம். மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி மலர்க்கொடி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கெ.ரா. திவ்யஸ்ரீ, ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, இ.ஆ.ப., உதவி ஆணையர் (கலால்) திரு. அ. திருவாசகம், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ. நளினி, பள்ளி முதல்வர் முனைவர் திருமதி மெர்சி ஸ்டெல்லா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments
Thank you for your comments