Breaking News

தொடர்ந்து 20 ஆண்டுகளாக முதலிடம்: ரத்ததான சேவையில் மாநில விருது வென்ற காஞ்சிபுரம் தவ்ஹீத் ஜமாஅத்!


 காஞ்சிபுரம், பிப். 3: 

உயிர்காக்கும் உன்னத சேவையான ரத்ததானப் பணியில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்காக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சிபுரம் மாவட்டக் கிளைக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மாநில செயற்குழுவில் அங்கீகாரம்:

ஈரோட்டில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனிதநேயப் பணிகளில் மிக முக்கியமான ரத்ததான சேவையைத் தமிழகம் முழுவதும் உள்ள கிளைகளில் அதிக அளவில் செய்தமைக்காக, காஞ்சிபுரம் மாவட்டக் கிளைக்கு மாநில அளவிலான முதல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த விருதினை மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் இ. முகம்மது அலி வழங்க, காஞ்சிபுரம் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

20 ஆண்டு சாதனை:

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அகரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"மனித நேய அடிப்படையில் உயிர்காக்கும் ரத்ததான சேவையைத் தடையின்றிச் செய்து வருகிறோம். அந்த அர்ப்பணிப்பிற்குச் சான்றாக, தொடர்ந்து 20 ஆண்டுகளாக ரத்ததான சேவையில் காஞ்சிபுரம் கிளை மாநில அளவில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

நிர்வாகிகள் வாழ்த்து:

இந்த விருதினைப் பெறும்போது மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன், மாவட்ட செயலாளர் அல்தாப், மாவட்ட பொருளாளர் அப்துல்காதர் உள்ளிட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த அங்கீகாரம் தங்களின் சமூகப் பணிக்குக் கிடைத்த கூடுதல் உத்வேகம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments