வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே விதிமீறல் கட்டிடம்: மழைநீரை வழிமறிக்கும் ஆக்கிரமிப்பு! மாநகராட்சி மெத்தனம் ஏன்?
வேலூர் மாநகரின் இதயப் பகுதியான கிரீன் சர்க்கிள் அருகே அமைந்துள்ள 'ரீஜென்சி சமீரா' (Regency Sameera) ஹோட்டல் கட்டிடம், முற்றிலும் முறைகேடான அனுமதியில் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது எவ்வித 'ரினோவேஷன்' (Renovation) அனுமதியும் இன்றி கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மிக முக்கியமாக, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கால்வாயைத் தூர்த்து, அதன் மீது ஆக்கிரமித்து இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. இதன் வரைபடங்களே (Maps) ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும் சான்றாக உள்ளன.
"விதிமீறல்களைப் பொய் என்று சொல்ல முடியாது! இதோ, கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதற்கான வரைபடச் சான்றுகள் உங்கள் பார்வைக்கு..."
அண்மையில் பெய்த மழையின்போது, கிரீன் சர்க்கிள் பகுதியில் நீண்ட நேரம் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றதற்கு இந்த ஆக்கிரமிப்பே முக்கியக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொண்டு நிறுவனங்கள் சார்பில் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டும், வேலூர் மாநகராட்சி நிர்வாகம் பெயரளவுக்கான ஆய்வைக் கூட மேற்கொள்ளவில்லை. மாநகராட்சி ஆணையரின் இந்தத் தயக்கம் ஏன்? மாவட்ட ஆட்சியரின் உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்படுகிறதா என்ற கேள்வி இங்கே எழுகிறது.
இதுபோன்ற விதிமுறைகள் மீறிய கட்டிடங்கள் குறித்து கேள்வி எழுப்பினால், கட்டிட உரிமையாளர்கள் சார்பில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கைகாட்டுவதாகக் கூறப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகளின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற விதிமீறல்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் மெத்தனத்தாலும், முறைகேடுகளாலும் பொதுமக்கள் மீது வரிச்சுமை கூடிக்கொண்டே செல்லும் வேளையில், இந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் மீது மாநகராட்சி நிர்வாகம் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
.jpg)

No comments
Thank you for your comments