Breaking News

ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு: ரேபிடோ ஓட்டுநர்களை மடக்கிப் பிடித்து RTO-விடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்! - வாழ்வாதாரம் பாதிப்பதாகப் புகார்.


 ஸ்ரீபெரும்புதூர் :

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மடக்கிப் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் (RTO) ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 

பின்னணி: ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஓரகடம், வல்லம் மற்றும் பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் குறைந்த கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரேபிடோ இருசக்கர வாடகை வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.


திட்டமிட்டுப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்: ரேபிடோ வாகனங்களின் வருகையால் தங்கள் ஆட்டோ தொழில் முடங்குவதாகவும், வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று ஒரு அதிரடி முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள், ரேபிடோ செயலியில் (App) பயணத்தை முன்பதிவு செய்வது போல நடித்து, அங்கு வந்த ரேபிடோ ஓட்டுநர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.

RTO அலுவலகத்தில் பதற்றம்: பிடிபட்ட ரேபிடோ ஓட்டுநர்களை ஸ்ரீபெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் அலுவலக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், ரேபிடோ ஓட்டுநர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


தனியார் பைக் டாக்ஸிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே நிலவி வரும் இந்தப் போட்டி, தொழில் ரீதியாகப் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

No comments

Thank you for your comments