Breaking News

வேலூர் மாநகரத்தில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் மீது வசூல் வேட்டை புகார்! - நடைபாதை வியாபாரிகள் கடும் மன உளைச்சல்


வேலூர், டிச.6:

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபாதைக் கடைகள் நடத்தி வரும் நடைபாதை வியாபாரிகளிடம், ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் ரூ.50,000 வரை கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகப் பரவலாகப் புகார் எழுந்துள்ளது. தினசரி வருமானத்தை நம்பி வாழும் ஏழை வியாபாரிகள், இத்தொகையைக் கொடுக்க முடியாமல் செய்வதறியாது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அதிர்ச்சிக்குள்ளாக்கும் கட்டாய வசூல்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளான சாரதி மாளிகை, பெரியார் பூங்கா, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ராஜா தியேட்டர் உட்பட பல இடங்களில் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான நடைபாதைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் தங்கள் பிழைப்பை நடத்திவரும் சிறு வியாபாரிகள்தான் தற்போது வசூல் வேட்டைக்கு இரையாகி உள்ளனர்.

பெயரை வெளியிட விரும்பாத வியாபாரிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், 

"எங்கள் அன்றாட வர்த்தகத்தில் இருந்து ஒரு கணிசமான தொகையை, ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு மாதம்தோறும் தவறாமல் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதாவது, 

புதியதாக கடை நடத்த  ரூ.50 ஆயிரமும், மாதந்தோறும் ரூ.2000 முதல் ரூ.5000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால், எங்களின் கடைகள் உடனடியாக அகற்றப்படும் என்று மிரட்டுகின்றனர் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். 

அந்த ஆளும் கட்சி பிரமுகர் அரசியல் செல்வாக்குடனும், காவல்துறையின் இடைத்தரகராகவும் செயல்படுவதாக கூறப்படுகின்றனர். 

ஆதரவற்ற நிலையில் வியாபாரிகள்

அன்றாடச் செலவுகளையும், குடும்பத்தின் தேவைகளையும் சமாளிக்கவே கடினமாக உள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகையைக் கட்டாயமாகச் செலுத்துவதால், பல வியாபாரிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், ஆளும் கட்சியின் பின்னணி இருப்பதால், அந்தப் பிரமுகரை எதிர்க்கவோ, தட்டிக் கேட்கவோ தைரியம் இல்லாமல், வியாபாரிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

"ஆளும் கட்சிப் பிரமுகரின் மிரட்டலுக்குப் பயந்து, கண்ணீர் வடித்தவாறே பணத்தைக் கொடுக்க வேண்டிய அவல நிலையில் உள்ளோம். நாங்கள் உழைப்பதெல்லாம் இந்த வசூலுக்கே போய்விடுகிறது," என ஒரு பெண் வியாபாரி வேதனையுடன் தெரிவித்தார்.

நிர்வாகத் தலையீட்டுக் கோரிக்கை

இச்சம்பவம் குறித்து, வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இந்தக் கட்டாய வசூல் புகார் குறித்து நேரடியாகத் தலையிட்டு, முழுமையான மற்றும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆளும் கட்சிப் பிரமுகர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

வேலூர் மாவட்ட நிர்வாகம் இந்த முக்கியப் புகாரின் மீது தீவிர கவனம் செலுத்தி, ஏழை வியாபாரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்யுமா என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தீர்வுக்கான நம்பிக்கை

இந்நிலையில், சாலையோரக் கடைகள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், 02&09&2023ம் தேதி அன்று தனி நல வாரியம் ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சாலையோர வியாபாரிகள் நல வாரியத்தின் தலைவராக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அமைத்துள்ள இந்த நல வாரியம், தெருவோர வியாபாரிகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரியத்தின் மூலம் வேலூரில் தற்போது எழுந்துள்ள கட்டாய வசூல் புகார் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நல வாரியம் இணைந்து இந்த முக்கியப் புகாரின் மீது தீவிர கவனம் செலுத்தி, ஏழை வியாபாரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்யுமா என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 

ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இதுபோன்ற செயலால் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இதுபோன்றவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...  


யார் அந்த ஆளும் கட்சி நபர்? காலச்சக்கரம் சுழற்சியில் ஆதாரங்களுடன்  நமது நிருப்ர் டைரியில் விரைவில் வெளிவரும்.. தொடரும்...?





No comments

Thank you for your comments