Breaking News

"திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது!" - காஞ்சிபுரத்தில் கி. வீரமணி அதிரடிப் பேச்சு. 2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும் என முழக்கம்!

 காஞ்சிபுரம் | டிசம்பர் 23, 2025

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் உலகம்' அமைப்பதற்கான நிதியளிப்புப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே மகத்தான வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

நிதி வழங்கல்: திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், காஞ்சிபுரம் எம்பி க. செல்வம், எம்எல்ஏக்கள் க. சுந்தர், எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெரியார் உலகம் அமைப்பதற்காக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ரூ. 3 லட்சமும், மேயர் சார்பில் ரூ. 50 ஆயிரமும் என மொத்தம் ரூ. 5 லட்சம் நிதி கி. வீரமணியிடம் வழங்கப்பட்டது.

கி. வீரமணியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

  • திமுகவின் வெற்றிப் பயணம்: "மக்களவை, உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் என அனைத்திலும் வெற்றி கண்ட திமுகவை யாராலும் அசைக்க முடியாது. வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும்."
  • மத்திய அரசு மீது சாடல்: "மத்திய பாஜக அரசு வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மூன்றையும் 'திரிசூலம்' போலப் பயன்படுத்தி மிரட்டப் பார்க்கிறது. இதற்குத் திமுக ஒருபோதும் அஞ்சாது."
  • வாக்குத் திருட்டு புகார்: "வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களைச் சேர்த்து வாக்குத் திருட்டு நடத்தச் சூழ்ச்சிகள் நடக்கிறது. பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்."
  • மகளிர் நலத்திட்டங்கள்: "கேட்காமலேயே பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய அரசு இது. ஒரு குடும்பத்தில் 5 பெண்கள் இருந்தாலும் மாதம் ரூ. 5,000 வழங்கும் ஒரே அரசாக திமுக திகழ்கிறது."

மேலும், நிதி மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படுவதாக ரிசர்வ் வங்கியே பாராட்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தின் நிதிச் சுமையைத் தமிழகத்தின் மீது தள்ளி மத்திய அரசு சிதைப்பதாகக் குற்றம் சாட்டினார்.


No comments

Thank you for your comments