காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் முயற்சி: மத்திய அரசை கண்டித்து சிஐடியூ போர்க்கொடி! 125 பேர் கைது.
காஞ்சிபுரம் | டிசம்பர் 23, 2025
முக்கிய கோரிக்கைகள்: தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மேலும், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிய வேலைப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி விண்ணதிரும் கோஷங்களை எழுப்பினர்.
போலீஸ் - தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம்: சிஐடியூ மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.
கைது மற்றும் விடுதலை: ரயில் மறியல் செய்ய முயன்ற சிஐடியூ மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. நேரு உட்பட மொத்தம் 125 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
செய்தி மற்றும் படங்கள்: காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் ஜாபர்
No comments
Thank you for your comments