எழுதுக அமைப்பின் அலுவலகம் - வெ.இறையன்பு திறந்து வைத்தார்
காஞ்சிபுரம், டிச.21:
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து அவர்களை எழுத்தாளர்களாக உருவாக்கி வருகிறது காஞ்சிபுரத்தை தலமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எழுதுக அமைப்பு.இந்த அமைப்பின் அலுவலகம் காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் தொடங்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அமைப்பின் நிர்வாகி சுகுமாறன் தலைமை வகித்தார்.
அமைப்பின் நிர்வாகிகள் பாலச்சந்தர்,முரளி,லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிறுவனத் தலைவர் கிள்ளி வளவன் வரவேற்று பேசினார்.நிகழ்வில் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் வெ.இறையன்பு கலந்து கொண்டு எழுதுக அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்ததையும் பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து மாணவர்கள் எழுதிய புத்தகங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வைப்பதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த நடமாடும் நூலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
எழுதுக அமைப்பின் நிறுவனத் தலைவர் கிள்ளிவளவன் பேசுகையில் மாணவர்களால் இதுவரை 351 புத்தகங்கள் எழுதப்பட்டு அவையனைத்தும் புத்தகங்களாக வெளியாகி உள்ளன.மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு புத்தகங்களையும் எழுதிக் கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை விரைவில் 500 ஐ தொட்டு விடும்.எங்களின் ஒரே நோக்கம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களை எழுத்தாளர்களாக மாற்றுவதே என்றார்.
விழாவில் எழுதுக இயக்கத்தின் ஆசிரியர்கள்,வழிகாட்டி ஆசிரியர்கள்,புத்தகம் எழுதியுள்ள மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக எழுதுக அமைப்பின் நிர்வாகி முரளி தேசியக் கொடியை ஏற்றினார்.
No comments
Thank you for your comments