Breaking News

டிச.8,காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் - மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு


காஞ்சிபுரம், டிச.2:

காஞ்சிபுரத்தில் வரும் டிச.8 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து மடாதிபதிகளும்,ஆதீனங்களும் பங்கேற்கவுள்ளனர்.


பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பர நாதர் திருக்கோயில். வரலாற்றுப் பெருமையும், புராணச் சிறப்புகளும் உடைய இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.29 கோடி மதிப்பில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கும்பாபிஷேகத்தையொட்டி ஒரே நேரத்தில் 160 சிவாச்சாரியார்கள்,160 வேத விற்பன்னர்கள் அமர்ந்து யாகசாலை பூஜைகளை நடத்தும் வகையில் பிரம்மாண்டமான நவகுண்ட யாகசாலை மண்டபம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிச.4 ஆம் தேதி காலை 9 மணிக்கு அனுக்கை விக்னேசுவர பூஜை, தனபூஜை,கோபூஜை,நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெறுகிறது.

டிச.5 ஆம் தேதி யாகசாலை பிரவேசம்,வாஸ்து சாந்தி,கும்ப அலங்காரம் ஆகியனவும்,மறுநாள் டிச.6, 7 ஆகிய தேதிகளில் விசேச சந்தி யாகபூஜையும் நடைபெறுகிறது.

டிச.8 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மகா பூரணாகுதி தீபாராதனை நிறைவு பெற்று புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்களால் எடுத்துச் செல்லப்பட்டு சரியாக அதிகாலை 5.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அதனையடுத்து காலை 6.30 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமும்,நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.மாலையில் திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகிறது.


கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடாதிபதி சபாபதி தம்பிரான் சுவாமிகள், வண்ணச்சரபம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், ராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை சுவாமி நித்யானந்தர் சுவாமிகள்,ரத்தினகிரி சித்தர் பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவின் தலைவர் எம்விஎம் வேல்மோகன் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமாரதுரை, உதவி ஆணையர்(ஓய்வு) லட்சுமி காந்தன் பாரதிதாசன், ஆலய செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி மற்றும் ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள், உற்சவதாரர்கள், உபய தாரர்கள்,கோயில் பணியாளர்கள்  ஆகியோர் செய்து வருகின்றனர்.

  .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்! 

நல்ல பலன்களை பெற என்ன செய்யவேண்டும்? பரிகாரம் என்ன?


























No comments

Thank you for your comments