Breaking News

ஏனாத்தூர் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா: 1257 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன! டாக்டர் அமர் அகர்வால் நெகிழ்ச்சி உரை.


 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER) மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

 

தலைமை மற்றும் வரவேற்பு: இந்த விழாவிற்கு மீனாட்சி உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை புரவலர் கோமதி, இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர், துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் சி.ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள்: விழாவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவரும், புகழ்பெற்ற கண் மருத்துவருமான பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், "வாழ்நாள் முழுவதும் கற்றல் மிக முக்கியம். கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒழுக்கம் மட்டுமே ஒரு மருத்துவரை வெற்றிகரமான மனிதராக மாற்றும்" என பட்டதாரிகளை ஊக்குவித்தார். மேலும், ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஸ்டெபி சிறப்புரையாற்றினார்.

கௌரவ பட்டங்கள் மற்றும் விருதுகள்:

  • முனைவர் பட்டம்: வேலூர் சி.எம்.சி (CMC) மருத்துவமனையின் செல் ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் டாக்டர் நிஹால் தாமஸ் அவர்களுக்கு, நீரிழிவு நோய் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அறிவியல் முனைவர் பட்டம் (D.Sc - Honoris Causa) வழங்கப்பட்டது.
  • மனிதநேய விருது: பழங்குடி மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு பள்ளி தலைமையாசிரியர் திரு. எஸ். அய்யப்பன் அவர்களுக்கு "ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மனிதநேய சேவை விருது" வழங்கப்பட்டது.


  • விளையாட்டு விருது: மாநில மற்றும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த பி.பி.ஏ மாணவி செல்வி ஷைனி கிளாட்சியா அவர்களுக்கு "ஆகாஷ் பிரபாகர் சிறப்பு விளையாட்டு வீரர் விருது" வழங்கப்பட்டது.
  • முன்னாள் மாணவர் விருது: 10 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு "கோமதி ராதாகிருஷ்ணன் சிறப்பு முன்னாள் மாணவர் விருது 2025" வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பட்டதாரிகள் விவரம்: இவ்விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் என மொத்தம் 1,257 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்விச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 103 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் 4,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments