ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் - அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்
ரூ.13.88 கோடி மதிப்பீட்டிலான அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சி.வெ. கணேசன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் சி. பழனி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கொ. வீர ராகவராவ், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், கண்டப்பங்குறிச்சியில் இன்று (13.12.2025) நடைபெற்றது.
முதலமைச்சரின் கல்வி முன்னுரிமை – அமைச்சர் உரை
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அவற்றை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும், கல்வி கற்கச் சிறந்த சூழல் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் – விரிவாக்கம்
மேலும், அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழ்நாட்டில் 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்த நிலையில், தற்போதைய அரசின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கூடுதலாக 42 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், கடலூர் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் வேப்பூர் பகுதிகளில் தலா ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் எளிதாக கல்வி கற்கும் வகையில், ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், 71 நிலையங்களில் 4.0 தொழில்நுட்ப வசதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
வேப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டட விவரம்:
வேப்பூர் பகுதி மாணவர்களின் நலன் கருதி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.11 கோடி மதிப்பீட்டில்,
- தரைத்தளம் : 1291.30 சதுர மீட்டர்
- முதல்தளம் : 469.20 சதுர மீட்டர்
தரைத்தளத்தில் வகுப்பறைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை அறை, பதிவறை, கருவிகள் சேமிப்பு அறை, நூலகம், அலுவலர்கள் அறை, முதல்வர் அறை, அலுவலகம், பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை மற்றும் சாய்வு தளம் ஆகிய வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
முதல்தளத்தில் வகுப்பறைகள், மொழித்திறன் மற்றும் மென்திறன் ஆய்வகம், மின்னணு தொகுதி அறை, வரைவு அறை, ஆண்கள் கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. கட்டடம் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்படுவதுடன், கழிவறைகளில் செராமிக் டைல்ஸ் பதிக்கப்படும். மேற்கூரையில் சூரிய ஒளி பிரதிபலிக்கும் ஓடுகள் பதிக்கப்படவுள்ளதுடன், கட்டடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் நுழைவுவாயிலிலிருந்து கட்டட முகப்பு வரை அணுகுச் சாலை அமைக்கப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்
மாணவர்கள் பாதுகாப்பான, மனதிற்கு இனிய சூழலில் உயர்தரமான கல்வி பெறவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாணவர்களுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தும் வகையில், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில்,
- ஏ.சித்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி, விருத்தாசலம்,
- மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
ஆகிய இரு பள்ளிகளிலும் தலா 340 சதுர மீட்டர் பரப்பளவில், 4 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடங்கள், மாவட்ட கனிமவள நிதியின் கீழ் தலா ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில், மொத்தம் ரூ.2.88 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் வே. மீனாட்சி, வேப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வி. முத்துசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments