Breaking News

காஞ்சிபுரத்தில் 126 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியது


காஞ்சிபுரம், டிச.4:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த தொடர் கனமழையால் 126 ஏரிகள் வியாழக்கிழமை முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.


வங்கக்கடலில் டிட்வா புயல் சின்னம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. 

இதன் காரணமாக தாமல் ஏரி, திருப்புக்குழி ஏரி, காவனூர் புதுச்சேரி ஏரி, திருப்புலிவனம் ஏரி, கூரம் சித்தேரி, இளநகர் ஏரி, அனுமன்தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, மருத்துவம்பாடி ஏரி, கோவிந்தவாடி பெரிய ஏரி உட்பட 126 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.  தாமல், உத்தரமேரூர்,பழையசீவரம் உள்ளிட்ட பல ஏரிகளில் உபரிநீர் வெளியேறி வருகிறது.

ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 381 ஏரிகளில் 126 ஏரிகள் 100 சதவிகிதம் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன. 82 ஏரிகள் 75 சதவிகிதமும், 101 ஏரிகள் 50 சதவிகிதமும், 69 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

மழையளவைப் பொறுத்தவரை டிச.3 ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை (மி.மீட்டர் அளவில்) காஞ்சிபுரம் 10.6, உத்தரமேரூர் 12,வாலாஜாபாத் 9.5, செம்பரம்பாக்கம் 16.6, குன்றத்தூர் 15.5 மொத்த மழையளவு 75.4, சராசரி மழையளவு 12.6 ஆகவும் உள்ளது.

தொடர்மழை காரணமாக காஞ்சிபுரத்தில் லிங்கப்பன்தெரு, முருகப்பன்காலணி, பல்லவர்மேடு, திருக்காலிமேடு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதன்கிழமை கனமழை பெய்து இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை மழையில்லாததால் காஞ்சிபுரம் சகஜ நிலைக்கு திரும்பியது.

No comments

Thank you for your comments