அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கு கருத்தடை அறுவைச்சிகிச்சை -காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம், டிச.4:
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து உலக நவீன வாசக்டமி தினத்தையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.இதனையடுத்து அவர் கூறுகையில்...
ஆண்டு தோறும் நவ.21 ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி வரை உலக நவீன வாசக்டமி வாரமாக அனுசரிக்கப் படுகிறது. நிகழாண்டும் உலக நவீன வாசக்டமி வாரத்தை அனுசரிக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியனவற்றில் ஆண் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கு அரசு ஊக்கத் தொகையாக ரூ.1100 மற்றும் ஊக்குவிப்பாளர்களுக்கு ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நவீன குடும்ப நல அறுவைச் சிகிச்சையானது நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் செய்யப்படுவதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள் எம்.நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம்) பி.சதீஷ்குமார், துணை இயக்குநர்(காசநோய்) காளீஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,மாவட்ட குடும்ப நல செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments