Breaking News

விருத்தாசலம் அருகே அருந்ததிய இன மக்களுக்கு கோவில் வழிபாட்டு உரிமை மறுப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் பரபரப்பு


 விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊ.மங்கலம் வருவாய் கிராமம், புது குணங்குறிச்சி மற்றும் புது வேப்பங்குறிச்சியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலயம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வரும் இம்மக்களுக்கு, நெய்வேலி என்எல்சி நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து விருத்தாசலம் கோட்டாட்சியரின் பரிந்துரையின்படி கோவிலுக்கான இடம் ஒதுக்கி கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தினர்.

அதே நேரத்தில், ஊ.மங்கலம் காவல்துறையினர் அருந்ததியர் மக்கள்மீது போட்டதாக கூறப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்யவும் கோரப்பட்டது.

இதனையடுத்து, விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி மற்றும் நீல நெருப்பு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டம் நீல நெருப்பு கட்சி நிறுவனர் பாளையம் பூபதி தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்வில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழ் புலிகள் கட்சி நிறுவனர் திருவள்ளுவன், அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி மாநில செயல் தலைவர் தங்க. முருகன் ஆகியோருடன், இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் ராஜ்குமார், புரட்சி பாரதம் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ராஜகிருத்தி, இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல்,  விடுதலை தமிழ் புலிகள் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் வாழ சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசையும், நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விருத்தாசலம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)


No comments

Thank you for your comments