வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை இல்லாமல் அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை!
வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு-எவ்வித அறிவிப்பும் வெளியிடாது அலட்சியம் காட்டும் நீர்வளத்துறை
காஞ்சிபுரம்:
வடகிழக்கு பருவ மழையானது தொடங்கி பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைகட்டிலிருந்து காவேரிப்பாக்கம் கால்வாயில் 1185 கன அடியில் 900கன அடி நீரானது கோவிந்தவாடி கால்வாயில் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
அதில் ஓச்சேரி ரெகுலேட்டர் வழியாக தாமல் ஏரிக்கு சுமார் 300கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த தாமல் ஏரியிலிருந்து 300 கன அடி நீர் தண்ணீர் திருப்புட்குழி ஏரியில் விழுந்து அந்நீரானது வேகவதி ஆற்றில் கலந்து காஞ்சிபுரம் மாநகர எல்லைக்குள் 7 கிலோ மீட்டர் வரை பயணித்து பின்னர் பாலாற்றில் கலந்து வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர பகுதிகள் வழியாக பயணிக்கும் வேகவதி ஆற்றில் 300கன அடி நீரானது இரு கரைகளை தொட்டு சென்று கொண்டிருப்பதை பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைவது ஒரு புறம் இருந்தாலும், நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக வெள்ளப்பெருக்கு குறித்தான எவ்வித தகவல் கொடுக்காததால் எந்நேரத்தில் எவ்வுளவு அதிக அளவு நீர் வருமோ என தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதாக வேகவதி ஆற்றங்கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேகவதி ஆற்றங்கரை ஓரம் ஆயிரக்கணக்கான வீடுகள் இருந்துவரும் நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள் நீர் வரத்து குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவாக தான் ஞாயிற்றுக்கிழமை அன்று தாமல் ஏரியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வேகவதி ஆறு செல்லும் நீர்வழி பாதைகளை முழுமையாக நீர்வளத்துறையினர் இவ்வாண்டும் முறையாக தூர்வாரத காரணத்தினால் தங்களது பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் அபாயம் போன்றே இவ்வாண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனே ஒவ்வொரு இரவுகளை கடந்து வருவதாக மன வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித வெள்ள அபாயம் எச்சரிக்கையும் விடப்படாததால் எப்பொழுது வேண்டுமானலும் வெள்ளம் ஏற்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என வேகவதி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு பருவ மழைக்கும் ஆற்றை முறையாக தூர் வாரி இருந்தால் தங்களுக்கு இது போன்ற நிலைமை ஏற்படாமல் இருந்திருக்கும் என மனம் வருந்தும் பொதுமக்கள் இவ்வாண்டும் கணக்கு காட்டுவதற்கென வேலை செய்யும் நீர்வளத் துறையினரின் செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எவ்வித சுணக்கம் இன்றி நேரடியாக கண்காணித்து அப்பணிகளை செவ்வனே செய்திடுமாயின் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் இரவு நேரத்திலும் தாங்கள் தங்கள் குழந்தை குட்டிகளோடு நிம்மதியான ஓர் உறக்கத்தை அது ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை புலம்பி நிற்கின்றனர்.
No comments
Thank you for your comments