மாமன்ற கூட்டத்தில் அதிமுக , திமுக உறுப்பினர்களிடையே கூச்சலும் குழப்பமும் - பெரும் சலசலப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தார்.
ஆணையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.இக்கூட்டம் தொடங்கியவுடனேயே உறுப்பினர்கள் பலரும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் போதுமான அளவில் இருந்தும் குப்பை அள்ளும் வண்டிகள் இல்லாமல் இருப்பதால் நகருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை நேரிலும்,மாமன்ற கூட்டத்திலும் பலமுறை சொல்லியும் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கவில்லை என அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருமித்த குரலில் புகார் செய்தனர்.
உறுப்பினர்களில் சிலர் தங்களது வார்டுகளில் குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது,காய்ச்சல் பரவுகிறது.தொற்றுநோய்கள் பரவி யாருக்கேனும் மரணம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
அண்மையில் வார்டு வாரியாக நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் நடமாட முடியவில்லை. உறுப்பினராக உங்களைத் தேர்வு செய்து எந்த பலனும் இல்லை என்றும் பொதுமக்களிடையே அவப்பெயர் தான் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லக்கூட முடியாத நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பேசினார்கள். இக்கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தின் போது அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பதிலளித்து பேசியது.
போதுமான குப்பை வண்டிகள் இல்லாததால் குப்பைகள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 4 டிராக்டர்கள், ஒரு ஆட்டோ தேவை என அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் அவை வந்து விடும்.அதற்கு முன்பாக உடனடியாக வாடகைக்கு வாகனங்கள் எடுத்து குப்பைகளை அள்ளப்படும்.
குடிநீரில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை சுடவைத்து சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய ரயில் நிலைய சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments