சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நினைவுப்பரிசு - காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், நவ.21:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வரும் 1.1.2026 ஆம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது.
இதன்படி இம்மாதம் 4 ஆம் தேதியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கும் உட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களை சந்தித்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியும், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நினைவுப்பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பாராட்டுச்சான்றிதழ் பெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர் சத்யா தனது பணி அனுபவங்களை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் பிற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
நினைவுப்பரிசு வழங்கும் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன்,சார் ஆட்சியர் ஆஷிக்அலி மற்றும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments