காஞ்சிபுரம் அருகே மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு
காஞ்சிபுரம், நவ.21:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செய்யாறு அண்ணா கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ம.மதுரைவீரன்,முதுகலை வரலாற்று மாணவர்கள் ஜீவா,தேவக்குமார் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
பெருநகர் அருகே சேத்துப்பட்டு என்ற பகுதியில் மக்களால் அருள்நெறி அம்மன் என்ற பெயரில் வழிபடப்பட்டு வரும் சிலையை ஆய்வு செய்தனர்.
இச்சிலை குறித்து ம.மதுரைவீரன் கூறியதாவது..
இச்சிலையானது தவ்வை எனப்படும் மூத்த தேவியின் சிற்பம் என்பதையும் சிலையில் மாந்தன், மாந்தியின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இச்சிற்பமானது பல்லவர்கள் காலத்தில் சிறப்புடன் வழிபட்டு வந்த ஒரு தெய்வம்.
இச்சிலை மிகச்சிறந்த முறையில் வளமையின் அடையாளமாக பொதுமக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளது.புராணங்களில் குறிப்பிடப்படும் பாற்கடலை கடைந்த போது முதலில் வந்த தெய்வம் என்பதால் மூத்த தெய்வம் என அழைத்துள்ளனர். காலப்போக்கில் இச்சொல்லானது மருவி மூதேவி என்றும் அழைக்கப்படலாயிற்று.
பல்லவர்கள் முதல் சோழர்கள் காலம் வரை வழிபாட்டிலிருந்த தெய்வமானது காலப்போக்கில் அழிவு நிலைக்கு சென்றுள்ளது.இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் உறுதி செய்திருப்பதாகவும் ம.மதுரைவீரன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments