Breaking News

கட்சி பேதமின்றி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு.அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம்


காஞ்சிபுரம், நவ.15:

கட்சி பேதமின்றி மக்கள் நலனுக்காகவே பல மகத்தான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதாக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.



காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளர் கோ.யோகவிஷ்ணு வரவேற்றுப் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் திட்ட விளக்கவுரை மற்றும் கூட்டுறவுத்துறையின் சிறப்புகள் குறித்து விரிவாக பேசினார்.

விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள்,1340 பயனாளிகளுக்கு ரூ.13.56 கோடி  மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியது..

கிராமப்புற வீடுகளில் இன்றும் அனைவரது வீடுகளிலும் சமையல் எரிவாயு உருளை இருக்கிறது என்றால் அதற்கு காரணம் 1998 ஆம் ஆண்டு கூட்டுறவுத்துறை மூலமாக விநியோகம் செய்யப்பட்டதே முக்கிய காரணம்.  

வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராக அப்போது நான் இருந்ததால் இந்த விபரத்தை முதல்வராக இருந்த கருணாநிதியிடம் சொல்லி ரூ.3500 கடனாக வழங்கி சமையல் எரிவாயு உருளை தமிழகத்தில் உள்ளஅனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல மக்கள் நல மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மிகக்குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்ககளில் மருந்துகள் விற்கப்படுகிறது.

தாயுமானவர் திட்டம் மூலம் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்,பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிட அன்புக்கரங்கள் திட்டம்,குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இப்படியாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு.பிற மாநில முதல்வர்களும் பாராட்டுகிறது.

எந்தவித கட்சி பேதமுமில்லாமல் மகத்தான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாகவும் பேசினார்.


உங்களுக்கே தெரியாத பெருமாளின் ரகசியம்! ஏகாதசி நன்னாளில் கேட்டால் நற்பலன்...

விழாவில் ஒன்றியக் குழுவின் தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், மத்தியக்  கூட்டுறவு வங்கியின்  முதன்மை வருவாய் அலுவலர் அ.வெங்கட்ரமணன், உதவிப் பொதுமேலாளர் கந்தசாமி, அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் சீ.மங்கை ஆகியோர் உட்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிறைவாக பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் வா.சரவணன் நன்றி கூறினார்.

 .📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 



















No comments

Thank you for your comments