வாக்காளர் பட்டியலை ஒரே மாதத்தில் சீர்படுத்தி விட முடியாது - காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பேச்சு
காஞ்சிபுரம், அக்.31:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் சார் ஆட்சியர் ஆஷிக் அலி தலைமையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபீக் முன்னிலை வகித்தார்.
இப்பயிற்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எவ்வாறு செய்வது என வாக்குச்சாவடி முகவர்களுக்கு சார் ஆட்சியர் ஆஷிக் அலி விளக்கி பேசினார்.
1.1.2026 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி முகவர்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு முகவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் பேசுகையில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது என்பதை சரியாக கணக்கிட்டு விட முடியாது.
வாக்குச்சாவடி முகவர்களும் குறுகிய நாட்களில் இதை செயல்படுத்தி விட முடியாது. ஒரே மாதத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சீர்படுத்தி விடவும் முடியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது என்று பேசினார்.
பயிற்சி முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கே.நேரு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் பி.வி.சீனிவாசன் ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு ஆட்சேபணையும் எதிர்ப்பும் தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments