காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சர்வ தீர்த்தக் குளம் ரூ.34 லட்சம் மதிப்பில் புதுப்பிப்பு
காஞ்சிபுரம், நவ.7:
காஞ்சிபுரம் நகரின் மேற்குப்பகுதியில் வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்தக் குளம். இக்குளக் கரையில் ராமேசுவரர்,காசி விசுவநாதர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிவன்கோயில்கள் அமைந்துள்ளது.
அனைத்து நதிகளும் இங்கு சங்கமமாகி இறைவனை வழிபட்டதாகவும்,இறைவன் நதிகளின் வழிபாட்டினை மெச்சி இத்திருக்குளத்தில் பக்தர்கள் நீராடி வழிபட்டால் பல பாவங்களிலுமிருந்தும் நீங்குவர் என சிவபெருமானே கூறியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுராணம் சர்வதீர்த்தப்படலம் என்று தனிப்படலமாகவே போற்றுகிறது.
பல ஆண்டுகளாக இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சர்வதீர்த்தக்குளம் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இக்குளம் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது குறித்து அக்கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி கூறுகையில் கோயில் குளத்தின் மொத்த பரப்பளவு 2,41,526 சதுர அடியாகும்.
குளக்கரையில் இருந்த முட்புதர்கள், புல்பூண்டுகள் ஆகியன அகற்றி அவை மேலும் அசுத்தம் ஆகாமல் இருக்க ரூ.17.80 லட்சம் மதிப்பில் டைல்ஸ் கற்கள் பதிக்கவும்,குளத்தின் சுற்றுச்சுவரில் வர்ணம் பூச ரூ.15.60 லட்சமும் உட்பட மொத்தம் 34 லட்சம் செலவில் வரலாற்றுச் சிறப்புக்குரிய இக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக இக்குளம் புதுப்பிக்கும் பணியும் நிறைவு பெறும் எனவும் ப.முத்துலட்சுமி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments