வேலூர் மாநகராட்சியில் குடியிருப்பு அனுமதியில் இயங்கும் பிரமாண்டமான இரண்டு தங்கும் விடுதி - காற்றிலே பறக்கும் அரசு உத்தரவு..! Two huge hostels operating under residential permits in Vellore Corporation - a government order flying in the wind..!
வேலூர், அக்.6-
நீதிமன்ற வழிகாட்டுதலை மீறும் நடவடிக்கை
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (HUD) வழங்கும் அனுமதி, குடியிருப்பு பயன்பாட்டுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறி வணிக வாடகை, அறை சேவை, மற்றும் ஆன்லைன் தங்கும் வசதி வழங்குவது சட்டப்படி தவறு என விதிமுறைகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.
ஆனால், வேலூர் மாநகராட்சி இதை கண்டு கொள்ளாதது போல எந்தவித அமலாக்க நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால், அரசு உத்தரவு "காற்றிலே பறக்கிறது" என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி அலட்சியம் - பொதுமக்களின் அதிருப்தி
நகரின் குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாவது:
“சிறிய வணிகர் ஒருவர் கூட அனுமதி பெறாமல் கடை திறந்தால் உடனே சீல் வைக்கப்படுகிறது. ஆனால் பெரிய அளவில் தங்கும் விடுதிகள் அரசு விதிமுறைகளை மீறியும், அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. இது வெளிப்படையான இரட்டை நிலைப்பாடு,” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அரசு உத்தரவு செயல்பாட்டில் தளர்வு?
நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மாநகராட்சிக்கு இடையிலான தகவல் பரிமாற்ற குறைபாடு, அதிகாரிகளின் அலட்சியம், மற்றும் அரசியல் ஆதரவு போன்ற காரணங்களால் இத்தகைய மீறல்கள் நடைபெறுகின்றன என நகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதோடு, நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடனடி ஆய்வு செய்து, அனுமதியில்லா வணிக நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விசாரணை தேவை - பொதுமக்கள் கோரிக்கை
இத்தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, வேலூர் நகரில் பல சமூக அமைப்புகள் இதை கவனத்தில் கொண்டு விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தையும் மாநகராட்சி ஆணையரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற கட்டிடங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கையை தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி நிர்வாக இயக்குநர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகளின் மவுனம் தொடருமானால், இச்செய்தி மாநில அளவிலான அரசியல் விவாதமாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு கட்டிடங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புகார்தாரர் நீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சியின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்..
No comments
Thank you for your comments