Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


காஞ்சிபுரம், அக்.6:

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சேரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், மாவட்டப் பொருளாளர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊதிய உயர்வு,தவணை தவறிய நகைக்கடன்கள் ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தை செயலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திருப்பி வழங்க வேண்டும்,தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூ.1000க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் சொந்த ஊருக்கு அருகில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் செய்யப்பட வேண்டும் என்பன உட்பட மொத்தம் 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

No comments

Thank you for your comments