பல தலைமுறைகளை வாழ வைக்கிறது பனைமரம் - காஞ்சிபுரம் திட்ட இயக்குநர் பேச்சு
காஞ்சிபுரம், அக்.9
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் கிராமத்தின் ஏரிக்கரையில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் நடுவது என முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 3 ஆயிரம் பனைவிதைகள் நடும் விழா நடைபெற்றது.பசுமை இந்தியா மற்றும் சர்வம் அறக்கட்டளை ஆகியனவற்றுடன் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிர் கல்லூரி மாணவியரும் இணைந்து பனைவிதைகளை ஏரிக்கரையில் நடும் பணிகளை மேற்கொண்டனர்.இதன் தொடக்க விழாவிற்கு பசுமை இந்தியா அறக்கட்டளையின் தலைவர் மேகநாதன் தலைமை வகித்தார்.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா,ரோட்டரி கிராண்ட் சங்க தலைவர் சங்கர்,ஜோதி விடுதி இயக்குநர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வள்ளுவப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி பேசியது..
கடும்புயலையும் தாங்கி நிற்கக்கூடிய கரைகளைக் கூட நமது முன்னோர்கள் பனை ஓலையால் தான் வேய்ந்துள்ளனர். தடுப்பு வேலிகள் இல்லாத போது பனைமரத்தை வைத்துத்தான் கிராமத்தின் எல்லைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
பனைமரங்கள் வளர அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் பல தலைமுறைகளை வாழ வைக்கிறது. பனைமரத்திலிருந்து தான் நுங்கு,கிழங்கு,பனம்பழம், கருப்பட்டி போன்ற ஆரோக்கியமான பொருட்கள் கிடைக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியாகவும் இருக்கிறது.
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமே பனைமரங்கள்.தற்போது இவற்றை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் க.ஆர்த்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள், கல்லூரி மாணவியர் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட அனைவரும் இணைந்து ஏரிக்கரையில் பனைவிதைகளை நடத்தொடங்கினார்கள்.
No comments
Thank you for your comments