Breaking News

வடகலை, தென்கலை பிரிவினர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை


காஞ்சிபுரம், அக்.12-

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ. 16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.


இன்று திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு,

 "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களைக் கணக்கெடுத்து, இதுவரை 3707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மன்னர்கள் விட்டுச் சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலுக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாகப் பெறப்படுகிறது. தற்போது நான்கு திருக்கோவில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1512 கோடி நிதி வந்துள்ளது என்றும், இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை.


காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாகவும், இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்படுகிறது.

எனவே, பிரச்சனை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.


சமயபுரம் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

No comments

Thank you for your comments