காஞ்சிபுரத்திலிருந்து வைணவக்கோயில்களுக்கு முதியோர்கள் இலவச ஆன்மீகப் பயணம் A free spiritual journey
காஞ்சிபுரம், அக்.4:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாரம் தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வைணவக்கோயில்களுக்கு இலவசமாக ஆன்மீகப் பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகிறது.
கடந்த இரு சனிக்கிழமைகளிலும் மொத்தம் 140 பேர் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டு திரும்பினார்கள். இதன் தொடர்ச்சியாக 3 வது சனிக்கிழமையையொட்டி செங்கல்பட்டு,வேலூர்,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 73 முதியோர்கள் வைணவக்கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட இப்பக்தர்களுக்கு பயணத்தின் போது தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பிஸ்கட்,மருந்துப் பொருட்கள் மற்றும் அந்தந்த கோயில்களின் பிரசாதங்கள் அடங்கிய சிறு தொகுப்புகள் அடங்கிய மஞ்சள் பை வழங்கப்பட்டது.
இவற்றை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன், வரதராஜசுவாமி கோயில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆன்மீகப்பயணம் செல்லும் பக்தர்களிடம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜசுவாமி கோயில்,விளக்கொளிப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், பாண்டவ தூதப்பெருமாள் கோயில்,ஸ்ரீ பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள்கோயில் உட்பட 5 வைணவக் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பினார்கள், இவர்களுக்கு காலைச்சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலவச ஆன்மீகப் பயணம் தொடக்க விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கமலக் கண்ணன்,கோயில் செயல் அலுவலர்கள்,ஆய்வாளர்கள் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments