தீபாவளி ஷாப்பிங் - காஞ்சிபுரத்தில் அலைமோதிய கூட்டம்
காஞ்சிபுரம், அக்.19:
தீபாவளிப்பண்டிகைக்கு முதல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் இருந்ததால் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள்,பூ வகைகள் வாங்குவதற்காக நகரின் பிரதான சாலைகளான காந்தி சாலை, பழைய ரயில் நிலைய சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கைக்குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கூட்டம், கூட்டமாக வந்திருந்தனர்.
இதனால் அவ்விரு சாலைகளிலும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஷ்ணு காஞ்சி போலீஸôர் சாதாரண உடையிலும்,சீருடையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான உள்ளாடைகள் விற்பனை செய்வோர்,வளையல்கள்,பாசிகள், கவரிங் தோடுகள்,பெண்களின் மேலங்கிகள் (துப்பட்டாக்கள்) குழந்தைகள் காலணிகள் ஆகியவற்றின் கடைகள் அதிகமாகவும் இவற்றின் விற்பனையும் அதிகமாக இருந்தது.தீபாவளிக்கு முந்தைய நாளாக இருந்ததால் பட்டாசுக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பூனை,நாய் போன்ற வடிவத்தில் செய்யப்பட்ட குழந்தைகள் காலணிகள் ரூ.50க்கு விற்பனையானது. 3 கவரிங் தோடுகள் ரூ.100க்கும்,3 வரிசையிலான கவரிங் செயின் ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனையானது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக கவரிங் நகைகளை பொதுமக்கள் அதிகமாக வாங்குவதாகவும்,பயமின்றி விழாக்களுக்கு அணிந்து செல்லலாம் எனவும் மகளிர் பலரும் தெரிவித்தனர்.
உதிரிப்பூக்கள் விற்பனை செய்யும் கடைகளில் மகளிர்கள் மல்லிகை,சாமந்திப்பூ ஆகியனவற்றை கிராம் கணக்கில் வாங்கினார்கள்.புரட்டாசி மாதம் நிறைவு பெற்று ஐப்பசி மாதம் தொடங்கியதையடுத்து இறைச்சிக் கடைகள் மற்றும்பிரியாணிக்கடைகளிலும் பொதுமக்கள் வரிசையாக நின்று வாங்கிச் சென்றனர்.
கூட்டம் அதிகமாக காணப்பட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களையும் அதிகமாக நிறுவியும், ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments