காஞ்சிபுரத்தில் தொடர்மழையால் குளம் போல் தேங்கிய மழை நீர்... பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம், அக்.22:
காஞ்சிபுரத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமானதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை தொடர்ந்து புதன்கிழமை மாலை வரை கனமழையாக பெய்து கொண்டே இருந்தது.
இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளான,பழைய ரயில்நிலைய சாலை, திருக்காலிமேடு,விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு, சங்கூசா பேட்டை ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் சாலை சந்திப்பில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
மழைநீர் வழிந்தோடி ரங்கசாமி குளத்திற்கு செல்லும் வழிகள் ஆக்கிரமிப்பால் அடைக்கப்பட்டிருந்ததால் மழைநீரானது குளத்திற்கு செல்லமுடியாமல் தேங்கி நின்றதே வாகன ஓட்டிகளின் அவதிக்கு காரணமாக இருந்தது.
மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக் தலைமையில் ஒரு குழுவினர் ஜெசிபி உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வழிந்தோடத் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை மாலை 4 மணி வரை நீடித்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அதன் பிறகு மழைப்பொழிவு இல்லை.
மழையளவைப் பொறுத்தவரை(மாலை 4 மணி வரை மி.மீட்டரில்) காஞ்சிபுரம் 26.80, உத்தரமேரூர் 17.60, வாலாஜபாத் 57.50, ஸ்ரீ பெரும்புதூர்-68.20, குன்றத்தூர் 36.50, ஸ்ரீபெரும்புதூர் 48.40. மொத்த மழையளவு 255, சராசரி மழையளவு 42.50. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து கனமழையாக பெய்ததால் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாக அறிவித்தது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தின் மேல்பூச்சு சுவர் திடீரென விழுந்தது. இதனால் காலை உணவை தயாரிக்க வந்த பணியாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
No comments
Thank you for your comments