Breaking News

தொடர்மழை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் - 25 சதவிகித ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.



காஞ்சிபுரம், அக்.22:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரிகளின் கொள்ளவும் அதிகரித்து வருவதையொட்டி மொத்தம் 11,850 மணல் மூட்டைகளை நீர்வளத்துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் 25 சதவிகித ஏரிகள் 100 சதவிகிதத்தை எட்டியுள்ளது.



தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவானதையடுத்து புதன்கிழமை இரவு முதல் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்குப்பருவமழையின் தீவிரம் காரணமாக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

நீர் வளத்துறையின் காஞ்சிபுரம் மண்டலத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன.




இவற்றை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பருவமழை தீவிரமடையும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு வரத்துக்கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 17 ஏரிகளும்,செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 8 ஏரிகளும் உட்பட மொத்தம் 25 ஏரிகள் 100 சதவிகிதத்தை எட்டியுள்ளன.

86 ஏரிகள் 75 சதவிகிதம் முதல் 98 சதவிகிதத்தை எட்டியிருக்கின்றன.295 ஏரிகள் 50 முதல் 75 சதவிகிதத்தையும், 460 ஏரிகள் 25 முதல் 50 சதவிகிதத்தையும் எட்டியுள்ளன.

தொடர்மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரிகளும் தொடர்ந்து நிரம்பிக் கொண்டிருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7500 மணல் மூட்டைகளும்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 4350 மணல் மூட்டைகளும் உட்பட மொத்தம் 11,850 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



இவை தவிர மணல் நிரப்புவதற்கு தேவையான கோணிப்பைகள் 13 ஆயிரமும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் எம்.சாண்ட் மணல் மூட்டைகள் 218, சவுக்கு கம்புகள் 1300ம் தயார் நிலையில் உள்ளது. 


தாமல் ஏரி, உத்தரமேரூர் ஏரி உள்ளிட்ட 100 சதவிகிதம் நிரம்பியுள்ள பல ஏரிகளின் உபரிநீர் வெளியேறும் இடத்தில் பொதுமக்கள் அருகில் செல்ல வேண்டாம் என நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.





No comments

Thank you for your comments