3707 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
காஞ்சிபுரம், அக்.12:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ரூ.28.99 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் இது குறித்து மேலும் கூறியது..
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ.425 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 68 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.1000 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ரூ.28.99 கோடி மதிப்பில் 38 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 12 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.மீதப்பணிகளும் நிறைவு பெற்று வரும் டிசம்பர் 8 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும்.தமிழகத்தில் மொத்தமாக 3707 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 11845 திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் நிதியாக ரூ.1528கோடி பெறப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவற்றில் 65 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.இப்பணியை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் வேல்மோகன் முயற்சி எடுத்து விரைவில் வெள்ளோட்டத்துக்கு கொண்டு வருவார்.
சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.9 கோடி மதிப்பில் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவுற்று வரும் ஜனவரி மாதம் தங்கத்தேர் வெள்ளோட்டம் விடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி,இணை ஆணையர்கள் சி.குமாரதுரை, வான்மதி, ராஜலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், திமுக காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments