Breaking News

விருத்தாச்சலம் அருகே சாதி மோதல் – இருவர் மருத்துவமனையில் சிகிச்சை; போலீசார் குவிப்பு


📍 விருத்தாச்சலம் | 20.09.2025


கடலூர் மைய மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெருந்துறை கிராமத்தை சேர்ந்த நந்தா (தனகோபால் மகன்), கலைவாணன் (கலைச்செல்வன் மகன்) ஆகிய இருவர், இருசக்கர வாகனத்தில் கம்மாபுரம் சென்று உணவு அருந்திவிட்டு மீண்டும் கிராமத்திற்குத் திரும்பிய போது தாக்குதலுக்கு உள்ளாகினர்.

பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் வழிமறித்து, அவர்களின் ஆடையை கழற்றி அரைநிர்வாணமாக்கி அவமானப்படுத்தியதோடு, சுமார் 40 பேர் சூழ்ந்து கொண்டு சாதி பெயரை சொல்லி திட்டியும், தாக்கியும் விட்டனர்.

காயம் அடைந்த நந்தா மற்றும் கலைவாணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் வலியுறுத்தல்

சம்பவம் குறித்து தகவல் அறிந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி.ஆர். நீதிவள்ளல் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், விருத்தாச்சலம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணரிடம் கட்சி நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதி இளைஞர்கள் பிரகாஷ், சதீஷ் பாபு, வினோத், பாலாஜி உள்ளிட்டவர்களை உடனடியாக காவல்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணை செயலாளர், நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஏராளமானோர், தாக்குதலில் காயம் அடைந்தோரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

போலீசார் குவிப்பு

சம்பவம் நடைபெற்ற பெருந்துறை கிராமத்தில், இரு சமூகத்தினரிடையே மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.




📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)


No comments

Thank you for your comments