Breaking News

பலத்த மழையால் மின்கம்பியில் விழுந்த மரக்கிளை - உயிர்ச்சேதமின்றி செயல்பட்ட அரசுப் பணியாளர்கள்

காஞ்சிபுரம்,செப்.17:

காஞ்சிபுரத்தில் புதன்கிழமை அதிகாலையில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளிக்காற்றால் தும்பவனம் தெருவிலிருந்த மின்கம்பி மீது பெரிய மரக்கிளை ஒன்று விழுந்தது.சம்பவம் நடந்ததும் தீயணைப்பு வீரர்களும் மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து மரக்கிளையை அகற்றியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரத்தில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ளது தும்பவனம் தெரு.இத்தெருவில் அதிகாலையில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளிக்காற்றால் மின்கம்பி மீது பெரிய மரக்கிளை ஒன்று விழுந்தது.மரக்கிளையை மின்சாரக் கம்பிகள் தாங்கி நின்றன.

தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் பலரும் உடனடியாக வந்து அப்பகுதி முழுவதையும் மின்சாரத்தை துண்டித்தனர்.இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட ஏணி மூலமாக மரக்கொப்புகளை அகற்றினார்கள்.

அதன் பின்னர் மின்வாரிய ஊழியர்கள் துண்டித்த மின்சாரத்தை சரி செய்தனர்.

இதன் காரணமாக சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் தும்பவனம் தெரு,கீரை மண்டபம், ரங்கசாமி குளம், விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டது.

மின்வாரிய ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் சமயோசிதமாக செயல்பட்டதால் இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

No comments

Thank you for your comments