காஞ்சிபுரத்திலிருந்து முதியோர்கள் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா
காஞ்சிபுரம்,செப்.10:
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுக்கு 5 முறை முதியோர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலாவாக அழைத்து செல்லப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்படி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி முதியோர்களை ஆறுபடை வீடுகளுக்கும் ஆன்மீக சுற்றுலாவாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
}காஞ்சிபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட முதியோர்கள் அரசு அறிவித்த விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்ட 101நபர்கள் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து தொடங்கிய இப்பயணத்தை அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமாரதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பயனாளிகள் அனைவருக்கும் அன்றாட தேவைக்குரிய பொருட்கள் அடங்கிய கைப்பை வழங்கப்பட்டு அறநிலையத்துறை பணியாளர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இந்நிகழ்வில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், கேசவன்,ஆய்வாளர் அலமேலு ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments