Breaking News

வாலாஜாபாத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


காஞ்சிபுரம், செப்.10:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் முன்பாக புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கியம்மன் கோயில் தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி புதன்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🌸🔥 விபூதி யோகம் – வாழ்வை மாற்றும் தெய்வீக ரகசியம் 🙏 #astrology

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தில் பழமையான முத்து கொளக்கியம்மன் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலுக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா நடத்த அறநிலையத்துறை முடிவு செய்து ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு புதிய தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டத்திற்காக தயார் நிலையில் இருந்தது.

தேர்த்திருவிழாவின் போது புதிய தேரானது பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் வர வேண்டும் என்பது குறித்து இரு பிரிவினருக்கிடையே பிரச்சினை இருந்து வந்த நிலையில் இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இம்மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை கோயில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தேரை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளனர்.

தேரின் மீது பாதுகாப்புக்காக விரிக்கப்பட்டிருந்த தார்ப்பாய் மட்டும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.அதிஷ்டவசமாக தேர் எந்த வித சேதமும் இல்லாமல் தப்பியது.

புதிய தேரினை தீ வைத்து எரிக்க முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வாலாஜாபாத் பேருந்து நிலையம் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எழிலரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

No comments

Thank you for your comments