Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு – மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது | Draft Polling Station List Released at Kanchipuram Collectorate in Presence of All Party Representatives



 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை இன்று 18.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட, வாக்காளர் பதிவு அலுவலர் திரு.முருகானந்தம் அவர்கள் பெற்று கொண்டார்.

இந்திய  தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம் / பெயர் மாற்றம் / புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கு ஏதுவாக இன்று (18.09.2025)  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1401 வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களால் வெளியிடப்பட்டது. வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கான முன்னேற்பாடுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில்,  காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக வாக்களார் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அலுவலர்களுக்கு கீழ்கண்டுள்ளவாறு அறிவுறுத்தப்பட்டது.

வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்வதற்கு முன்பாக, தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் நேரடியாக களப்பணி செய்து, வாக்குச்சாவடி மையங்களை உறுதி செய்தல் வேண்டும். அவ்வாறு களப்பணி செய்யும் போது அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளான (Assured Minimum Facilities) குடிநீர், கழிப்பறை, சாய்வு தளம், மின்சார வசதி மற்றும் கட்டி உறுதி தன்மை உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.


ஏற்கனவே உள்ள  வாக்குச்சாவடி மையங்கள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும்பட்சத்தில், அருகாமையில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி / தனியார் பள்ளி கட்டிடம் / அரசு கட்டிடங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் ஒப்புதல் பெற்று முன்மொழிவுகள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

நகர்புற மற்றும் ஊரக பகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளும், 1200-க்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரித்திட அறிவுறுத்தப்பட்டதுடன், அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலர்களுக்கான வாக்குச்சாவடிகளாக இருப்பதை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத வண்ணம், வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்து, முன்மொழிவுகள் அனுப்பிட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் நல் ஒத்துழைப்பு  நல்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்கள் இடம் மாற்றம் / பெயர் மாற்றம் / புதிய வாக்குச்சாவடி அமைத்தல் தொடர்பான தங்களின் கோரிக்கை ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அவர்களிடம் 25-09-2025 -க்குள் எழுத்து  பூர்வமாக வழங்கப்பட  வேண்டும். மேற்படி பணியானது, 100 சதவீதம் தூய்மையாக, முடித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப.,  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments