முறையாக ஆவணங்கள் இல்லாத 32 மெ.டன் நெல் விதைகள் விற்பனை செய்ய தடை - ஆய்வு செய்த இணை இயக்குநர்
காஞ்சிபுரம், செப்.3
சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநர் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநர் வானதி,விதை ஆய்வாளர்கள் செந்தில்குமார், சிலம்பரசன், உமா மகேசுவரி ஆகியோர் அடங்கிய குழுவினர் காஞ்சிபுரத்தில் உள்ள விதை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது அரசால் அறிவிக்கப்படாததும்,முறையான ஆவணங்கள் இல்லாததுமான 32 மெ.டன் நெல் விதைகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவற்றை விற்பனை செய்ய தடை விதித்தனர்.இதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.மேலும் சேமிப்பமுறை, சுகாதாரமாக இல்லாத விதை நெல் விற்பனை நிலையத்தின் உரிமத்தையும் ரத்து செய்தனர்.
இது குறித்து சென்னை மண்டல விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீ வித்யா கூறியதாவது,
விதை விற்பனையாளர்கள் அதிக முளைப்புத்திறன் கொண்ட சான்று பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்க வேண்டும்.விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விபரங்கள் விலைப்பட்டியலுடன் தகவல் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அரசால் அங்கீகாரம் பெற்றதும்,அறிவிக்கப்பட்ட பருவத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விதை விற்பனை ரசீது விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு ஆவணங்களை முறையாக பராமரிக்க தவறினால் விதை சட்டத்தின்படி விதை விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments