Breaking News

திருடிய வீட்டில் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் இருவர் கைது

 காஞ்சிபுரம், ஆக. 7:

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரத்தில், வீட்டில் திருடிக்கொண்டிருந்த போது பெண்ணைக் கொலை செய்த வழக்கில், ஏற்கனவே ஒருவரை கைது செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திம்மசமுத்திரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெயசுரேஷ் (35) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் ஜூலை 24 அன்று திருடிக்கொண்டிருந்தனர். அப்போது வீடு திரும்பிய ஜெயசுரேஷின் மனைவி அஸ்வினியை, குற்றவாளிகள் இரும்புக்கம்பியால் தாக்கினர். இதில் அவர் கடுமையாக காயமடைந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காமல், அஸ்வினி ஜூலை 27 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரத்தை சேர்ந்த தமிழ்வாணன் சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரியவந்ததால், அவரை ஜூலை 28 அன்று கைது செய்தனர்.

தமிழ்வாணனிடம் விசாரணையில், அவர் மற்றும் அவரது நண்பர் ராஜசேகர் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது. ராஜசேகரை தேடி வந்த போலீசார், காஞ்சிபுரம் அருகே பள்ளப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த அவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கில், தமிழ்வாணன் மற்றும் ராஜசேகர் என இருவரையும் பொன்னேரிக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Kanchipuram Woman Murder During Theft Two Arrested 2025


No comments

Thank you for your comments