Breaking News

காஞ்சிபுரத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி தெய்வத் தமிழ் ஆய்விருக்கை – ஆக. 10 அன்று தொடக்கம்

 காஞ்சிபுரம், ஆக. 7:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெயரில், ரூ. ஒரு கோடி நிதி ஆதாரத்துடன் “ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி தெய்வத் தமிழ் ஆய்விருக்கை” மற்றும் தெய்வத் தமிழ் ஆய்வு மாநாடு தொடங்கப்படவுள்ளது. இந்நிகழ்வு, சுவாமிகளின் அவதார தினமான ஆகஸ்ட் 10ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடைபெறும் என, கல்லூரி முதல்வர் கலை. ராம. வெங்கடேசன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.




ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்தியம் முழுவதும் பயணம் செய்து பல கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவியதோடு, மத நல்லிணக்கம் மற்றும் சமூக சேவையில் பெரும் பங்கு ஆற்றியவர். அவரின் நினைவாக, 70வது பீடாதிபதியாக இருக்கும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி, ஆய்விருக்கை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ் பயில்பவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆக்கப்பூர்வ நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, உலகளாவிய தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, பன்னாட்டு தெய்வத் தமிழ் ஆய்வு மாநாடும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை தொடங்கும் மாநாட்டின் தொடக்க விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை ஆதீனம் சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் இலங்கை, கனடா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டை ஒட்டி, கோயில் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, காஞ்சிபுரம் கோயில்களைப் பற்றிய நூல்கள் மற்றும் ஆய்வுக் கோவைகள் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இரு நாள் நிகழ்வுகளும் நடைபெறும்.

மறுநாள் திங்கள்கிழமை மாலை நடைபெறும் நிறைவு விழாவில், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனவும், முதல்வர் ராம. வெங்கடேசன் தெரிவித்தார். பேட்டியின்போது, தமிழ்த் துறைத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்ப்பேராசிரியர் தெய்வசிகாமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.



Sri Jayendra Saraswathi Divine Tamil Research Chair Launch Kanchipuram 2025



No comments

Thank you for your comments