ரசாயண வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை பயன்படுத்தக்கூடாது - காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்
காஞ்சிபுரம், ஆக.13:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், எஸ்பி.கே.சண்முகம்,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா, சார் ஆட்சியர் ஆஷிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசியது..
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டுத்துறை வழங்கிய வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் சர்வ தீர்த்தக் குளம் மற்றும் பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சூற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
சிலைகளில் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல், இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம், ரசாயண வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே விநாயகர் சிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள்,இலைகள்,மற்றும் துணிகளையும் பூஜைப்பொருட்களாக பயன்படுத்தலாம்.
பிரசாத விநியோகத்திற்கு மக்கும் தட்டுகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்இடி பல்புகளையும் பயன்படுத்தலாம்.
பொறுப்புடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சுற்றுச் சூழலை எந்த வகையிலும் பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

No comments
Thank you for your comments