Breaking News

காஞ்சிபுரம் பட்டு நகரத்தில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி



காஞ்சிபுரம்: 

பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் இன்று சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டுச் சேலை வாங்க வந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இதனால் காந்தி சாலையில் உள்ள தேரோடும் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பட்டுச் சேலைக் கடைகளுக்கு முன்னால் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால், உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

காலை முதலே பட்டுச் சேலைக் கடைகளுக்கு வருகை தந்தவர்கள் தங்கள் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் சாலையில் நிறுத்தியதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அபாயத்துடன் பயணித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால், கடுமையான போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டது.



தகவல் அறிந்த காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போக்குவரத்தை சரிசெய்ய முயன்றபோது, விதிகளை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முயற்சித்தனர். 

ஆனால், அபராதம் விதிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அபராதம் விதிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இது உள்ளூர் மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

பட்டு நகரத்தின் பெருமை

உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு, அதன் தனித்துவமான வடிவமைப்பு, தரம் மற்றும் நேர்த்தியான வேலைப்பாடுகளுக்காகப் போற்றப்படுகிறது. பட்டு உற்பத்தியில் தனி முத்திரை பதித்த காஞ்சிபுரம், பல தலைமுறைகளாக பாரம்பரிய பட்டு நெசவுத் தொழிலைக் காத்து வருகிறது. 

இங்கு தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகள் அதன் அழகிய நிறங்கள், கனமான ஜரிகை வேலைப்பாடுகள் மற்றும் எளிதில் கிழியாத தன்மைக்காக உலகெங்கும் அறியப்படுகின்றன.

இதன் காரணமாகவே, திருமணங்கள் மற்றும் சுப காரியங்களுக்காக பட்டுச் சேலை வாங்க ஏராளமானோர் காஞ்சிபுரத்தை நோக்கி வருகின்றனர்.

 தனியார் கடைகளுக்கு ஆதரவாக அதிகாரிகள்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால், இதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சில தனியார் பட்டுச் சேலைக் கடைகளுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. 

போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் பின்னணியில் இந்தத் தனியார் கடைகளின் செல்வாக்கு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், நகரத்தின் போக்குவரத்து ஒழுங்கு பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Thank you for your comments