பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை ஆயுள் - பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 4 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு விசாரணை பிரிவு போலீஸார் இவ்வழக்கில் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், நேற்று (ஆகஸ்ட் 1) பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
‘‘இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரசு தரப்பால் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) வெளியிடப்படும்'' என நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் நேற்று தீர்ப்பளித்தார்.
அதன்படி இன்று தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார்.
குறைந்த தண்டனை வழங்குமாறு கெஞ்சிய ரேவண்ணா.. முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது பிரஜ்வல் ரேவண்ணா, "நான் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எந்தப் பெண்ணும் தானாக முன்வந்து புகார் அளிக்கவில்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு வேண்டுமென்றே அவர்களை அழைத்து வந்து புகார் அளிக்க வைத்தது. எனக்கு குடும்பம் இருக்கிறது. 6 மாதங்களாக நான் எனது அம்மாவையும், அப்பாவையும் பார்க்கவில்லை. தயவு செய்து எனக்கு குறைவான தண்டனை கொடுங்கள். என் வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அரசியலில் வேகமாக வளர்வதுதான்" என குறிப்பிட்டிருந்தார்.
.png)
No comments
Thank you for your comments