Breaking News

“மறுமலர்ச்சி திமுக, மகன் திமுகவாக மாறிவிட்டது” – மல்லை சத்யா குற்றச்சாட்டு

 காஞ்சிபுரம், ஆக.1:

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 1:


மறுமலர்ச்சி திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை.சத்யா, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை.வைகோ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.



மறுமலர்ச்சி திமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வரும் மல்லை.சத்யா கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகனும் கட்சியின் முதன்மைச் செயலாளருமாக இருந்து வரும் துரை.வைகோ ஆகியோருக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறார்.

இரு தரப்பினும் மாறி, மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் மல்லை.சத்யா சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து முதற்கட்டமாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று அங்குள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

நான் இன்று வரை மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் தான் நீடிக்கிறேன். இதுவரை மதிமுக வின் பதவியிலிருந்து நீக்கப்படவே இல்லை. மறுமலர்ச்சி திமுக என்பது மகன் திமுகவாகவே மாறி விட்டது. மக்கள் நலனுக்காக கட்சியை நடத்தாமல் மகனுக்காக கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக துரை.வைகோ என்னை அவமானப்படுத்தியே வந்தார். ஆனால் அவர் என்னை வெல்ல முடியவில்லை.

குறைந்த பட்ச ஜனநாயகப் பண்பு கூட அவரிடம் இல்லை. எனவே பொதுமக்களிடம் நீதி கேட்டு நாளை சென்னையில் சிவானந்தா சாலையில் எனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளேன்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்த நாள் மாநாட்டிற்கு எனக்கோ எனது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை,கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்த கட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பாக ஒரு மாபெரும் எழுச்சிக் கூட்டத்தையும் அண்ணாவின் பிறந்த நாளில் நடத்த திட்டமிட்டுள்ளேன் என்றும் மல்லை.சத்யா தெரிவித்தார்.

மல்லை சத்யாவுடன் அவரது ஆதரவாளர்களான காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் பார்த்தீபன்,  துணைச் செயலாளர் கலைவாணி மாரிமுத்து, தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருள் உட்பட பலரும் உடன் வந்திருந்தனர்.

No comments

Thank you for your comments