Breaking News

திருமாவளவனின் எம்.ஜி.ஆர் குறித்த பேச்சு விவகாரம்: வன்னியரசு பதிவால் மீண்டும் சர்ச்சை

 சென்னை:

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய கருத்துகள் அதிமுகவின் கடும் கண்டனத்தை சந்தித்துள்ளன. திருமாவளவன், “எம்.ஜி.ஆரை விமர்சிப்பது என் நோக்கம் அல்ல” என்று விளக்கம் அளித்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு மீண்டும் இந்த விவகாரத்தை கிளப்பியுள்ளார்.

அம்பத்தூரில் நடைபெற்ற, திமுக சார்பான “போராளி ஓய்வதில்லை” என்ற தலைப்பிலான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில், திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “கருணாநிதி மீதான வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டின் மையமாக இருக்கிறது; அதை எம்.ஜி.ஆர் தான் கட்டமைத்தார். அவரால் தான் திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனிய பெண் தலைவர் வந்தார்” என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “எம்.ஜி.ஆர் குறித்து பேசினால், திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போவார்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன், “எம்.ஜி.ஆரை ஒரு சாதிக்குள் சுருக்கவில்லை; தவறாக புரிந்துகொண்டுள்ளனர். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி எல்லைகளை மீறியவர்கள். நான் கூறியது, கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி அதிமுக இயங்கியது” என்று விளக்கம் அளித்தார்.

ஆனால், இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, எக்ஸ் (X) பதிவின் மூலம் மீண்டும் இதை பெரிதாக்கினார். 

அவர் தனது பதிவில், 

“விசிக தலைவர், ‘கருணாநிதி மீதான வெறுப்பு அரசியலே தமிழ்நாட்டின் மையமாக இருக்கிறது; எம்.ஜி.ஆர் அதைத்தான் கட்டமைத்தார்’ என்று கூறினார். மேலும், எம்.ஜி.ஆருக்கு பின்னால் பார்ப்பனிய சக்திகள் இருந்ததால் தான் 1979 ஜூலை 2 அன்று பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு அரசாணையை பிறப்பிக்க முடிந்தது” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும், “அப்போது திமுக மற்றும் திக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன; அதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 இடங்கள் மட்டுமே வென்றது. 

இதனால் அதிர்ந்து போன எம்ஜிஆர் 1980 சனவரி 19 அன்று அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டினார்.கலந்து கொண்ட எல்லா கட்சிகளுமே, பிற்படுத்தப்பட்டோருக்கு விதிக்கப்பட்ட ஆண்டுக்கு 9,000 ரூபாய் வருமான வரம்பு அளவுகோலை ரத்து செய்ய வலியுறுத்தினர். உடனே அந்த அரசாணையை ரத்து செய்தார் எம்ஜிஆர்.

இட ஒதுக்கீடு குறித்து சமூகநீதிப்பார்வை வேண்டும். அந்த பார்வை திரு.எம்ஜிஆருக்கு இல்லை என்பதையே இந்த பொருளாதார அளவுகோலான சிந்தனை வெளிப்படுகிறது என்றார்.

மேலும்,   வெறுமனே கருணாநிதி வெறுப்பு மற்றும் தனக்கிருந்த சினிமா புகழை மட்டுமே வைத்து ஆட்சியை பிடித்தவர்

எம்ஜிஆர். மற்றபடி எந்த கோட்பாட்டு பின்னணியும் இல்லை. குறிப்பாக கலைஞருக்கு இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் எம்ஜிஆரிடம் இல்லை என்பதே உண்மை. எமது தலைவர் உரையும் அதைத்தான் வெளிப்படுத்தியது.

உச்சகட்டமாக “நான்ஒரு பாப்பாத்தி”என சட்டப்பேரவையிலேயே சொன்ன ஜெயலலிதா அம்மையார் திராவிட இயக்கத்துக்கு தலைமை தாங்கியிருப்பதையும் பார்க்கலாம். இதை புரிந்து கொள்வதற்கு முதலில் சித்தாந்த சிந்தனை வேண்டும்.

அது மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் எமது தலைவரின் உரையை கேட்காமலே சாபமிடுகிறார். இன்னும் உரத்துச்சொல்வோம் எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனியக்கும்பல் தான்.

இப்போது எடப்பாடி அவர்களை பின்னிருந்து இயக்குவது போல. என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டினார்.


No comments

Thank you for your comments