Breaking News

காஞ்சிபுரம் காலிட்ஸ் பிரியாணி கடையில் பரபரப்பு – வாந்தி, பூச்சி புகார்; உரிமையாளர் மறுப்பு, போலீசில் புகார்

காஞ்சிபுரம், ஆக 1: 

காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல காலிட்ஸ் பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பணம் கேட்டு மிரட்டி பணம் கொடுக்காமல் செல்லவே இந்தப் புகார் அளிக்கப்பட்டதாக கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.




காஞ்சிபுரம், வெள்ளைக்குளம் தெருவைச் சேர்ந்த சூரியராஜன் என்பவர், தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள காலிட்ஸ் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரது அண்ணனின் பிரியாணியில் வண்டு போன்ற ஒரு பூச்சி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சூரியராஜன் கூறினார். 

கடைக்கு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே சூரியராஜனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அவரை காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து, பிரியாணி கடை உரிமையாளர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சூரியராஜன் மற்றும் அவருடன் வந்த பத்து பேர் உணவில் ஈ இருப்பதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் கூறியதை அடுத்து உணவைச் சோதித்தபோது, அதில் ஈ இல்லை என்றும், வேறு உணவு வேண்டுமென்றால் மாற்றிக் கொடுப்பதாகக் கூறியபோது, ஊழியர்களிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.

காவலர்களுக்குத் தகவல் அளித்தால் கடையை அடித்து நொறுக்கி விடுவதாக மிரட்டியதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்காமல் இருக்க ரூபாய் 50,000 பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். 

பணம் கொடுக்க மறுத்ததால், ரூபாய் 3,000-க்கும் மேல் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார்.

பணம் பறிப்பதற்காகவே இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிமையாளர் புகார் அளித்தார்.

Kanchipuram Kalid's Biryani Controversy – Food Poisoning Complaint vs Extortion Allegation



No comments

Thank you for your comments