Breaking News

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

காஞ்சிபுரம், ஆக.9:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் சனிக்கிழமை பழங்குடியின குழந்தைகள் 40 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு முகாம் ஆகியன நடைபெற்றது.

காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை விளக்கும் வகையில் உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பள்ளிக்கு செல்வதை இடையில் நிறுத்தி விடக்கூடாது,  அரசு விடுதிகளில் தங்கிப்படிக்க வேண்டும், கல்வியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசு பழங்குடியின மக்களுக்கு கல்விக்காக செய்து வரும் நலத்திட்ட உதவிகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

வழிகாட்டல் முகாமிற்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி து.ராஜி தலைமை வகித்து 40 பழங்குடியின குழந்தைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களான புத்தகப்பை, எழுதுபொருட்கள், குறிப்பேடுகள் ஆகியனவற்றையும் வழங்கினார். 

தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தங்கவேல்,ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளையனார் வேலூர், கமூகம், விஷார் நகர், மூவேந்தர் நகர், வெள்ளக்குளம், அம்மையப்ப நல்லூர், பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments

Thank you for your comments