Breaking News

காஞ்சிபுரத்தில் ஆன்மீக நூல்கள் எழுதியவருக்கு பாராட்டு விழா


காஞ்சிபுரம், ஆக.15:

காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆன்மீக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட புலவர்.வ. குமாரவேலுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உள்ள திருநீலகண்டர் மாளிகையில் காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 36வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக இடபக்கொடி ஏற்றுதல், கொடிக்கவி பாராயணம், திருமுறைக்கோயில் திறப்பு, கன்னியப்ப உடையார் அரங்கம் திறப்பு, திருமுறைப்பாராயணம் ஆகியன நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருமுறைகளை தனித்தலைப்புகளாகக் கொண்டு பல நூல்களை கலைக்களஞ்சியமாக இயற்றிய புலவர் வ.குமாரவேலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவிற்கு திருச்சி தமிழக சைவநெறிக்கழக தலைவர் தத்புருஷ சரவண பவானந்த தேசிகர் அவர்கள் தலைமை வகித்து நூலாசிரியர் வ.குமாரவேலுக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.

புலவர்கள் சரவண சதாசிவம்,மோகனவேலு, அரக்கோணம் ஆர்.சாரங்கபாணி, கு.ராமலிங்கம், கோதண்டபாணி, மணி உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவனடியார் திருக்கூட்ட செயலாளர் சு.அருள் செல்வன் வரவேற்றார்.ஜெ.மகாதேவன்,எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோர் நூலாசிரியரை பாராட்டி பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து ஓதூவார் மூர்த்திகளுக்கு பொற்கிழி வழங்குதல், பஞ்ச புராணத் திரட்டு நூல் வெளியீடு ஆகியனவும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை காஞ்சி சிவனடியார் திருக்கூட்டத்தின் தலைவர் எம்.எஸ்.பூவேந்தன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments