காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் – ரூ.8.29 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.08.2025) நடைபெற்றது.
இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை மூலம் 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 8,24,000/- மதிப்பிலான பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்பு கடன்களையும், 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ. 5,172/- மதிப்பிலான (தார்பாலின் மக்காசோளம் விதை தொகுப்பு, உயிர் உரம்) வேளாண் இடுப்பொருட்கள் என ரூ.8.29 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் பயிர்க் கடன் பெற்ற விவசாயி பிரபாகரன் அவர்கள் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தெரிவித்ததாவது:
நான் என்னுடைய விவசாய நிலத்தினை உழுது தயார் செய்வதிலிருந்து அறுவடை வரை விதைகள், உரங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் நவீன வேளாண் கருவிகள் வாடகையில் பெற்று உழுது பயிர் செய்வதற்கு ஒவ்வொரு நிலையிலும் அதிக செலவுகள் செய்து வந்தேன்.
நான் முன்பணம் ஏதும் இன்றி மற்றவர்களிடம் கடன் பெற்று அதனை கொண்டு பயிர் செய்து, அதில் வரும் வருமானத்தில் கடன்களை திரும்ப செலுத்தும் சூழ்நிலையில் எனக்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையில், விவசாயிகளுக்கு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படும் பயிர்க்கடன்கள் இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ரூ.1,95,000/- கடன் வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இதன்மூலம் பயிர்தொழிலுக்கு தேவைப்படும் உரங்கள், விதைகள் போன்றவற்றை வாங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதோடு, எங்களின் வருமானத்தையும் உயர்த்தி கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விவசாய பெருமக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி வேளாண் இணை இயக்குநர் திருமதி.கிருஷ்ணவேணி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments